Saturday, August 8, 2015

சிசேரியன் அதிகமாவது ஏன்?




ன் மகளுக்குச் சுகப்பிரசவம்’ என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?
“சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?”
“தாமதமான திருமணம்,  நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”
“எப்போது சிசேரியன் அவசியம்?”
“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்
தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”

“எப்போது கவனமாக இருக்க வேண்டும்?”
“கர்ப்ப காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”

“சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?”
“கர்ப்ப காலங்களில் ஐந்து முறையேனும் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்தல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால (Trimester) இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்தல் அவசியம்.
     1. 36-வது வாரத்துக்கு மேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
     2.இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின்   ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கர்ப்ப கால யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நடப்பதும் நல்லது.
சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். 
இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்
பதால், இதை காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது.”

ஆர்கானிக் எது?

நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது.
காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.
சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.
அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.
அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.
தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.
கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது. 

Monday, August 3, 2015

விரல்கள் செய்யும் விந்தை

ந்தக் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, உடலைச் சுத்தம் செய்ய, நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதி மருந்து எடுத்துக்கொள்வது எனச் சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்ட காலத்திலேயே உடலைச் சுத்தம் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரத்தில் உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும்.
உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.
எப்படிச் செய்வது?
கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
பலன்கள்
வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.  வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.
பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.
முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.
சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற  பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.
மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.

கட்டளைகள்
 நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது.
 காலை, மாலை இருவேளையும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
 
 சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்னை இருக்கும்போது செய்யக் கூடாது.
 கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்.

மூட்டு அழகு பெற

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம். ஆனால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கறுப்பாய் கரடு தட்டிக் காணப்படும். நம் கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், இதற்குப் பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இந்தப் பகுதிகள் கறுத்துவிடுகின்றன. அமர்வது, எழுவது, படுப்பது போன்ற அன்றாட செயல்களின்போது, கை மூட்டு, கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், செல்களுக்கு முறையான நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்தப் பகுதிகள் கறுப்பாக மாறிவிடுகின்றன. மூட்டுத் தோல் பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும்.
நீர், உணவு
தினமும் இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தவிர, நீர்ச்சத்துகொண்ட மோர் மற்றும் இளநீரைக் குடிக்கலாம். வைட்டமின் ஏ, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, கேரட், உருளைக்கிழங்கு, பப்பாளி, தர்ப்பூசணி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு போன்றவை சாப்பிடவும். தினமும், ஒரு கப் கீரை எடுத்துக்கொள்ளவும். தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சருமத்தில் கருமை மறைந்து, பளபளப்பு கிடைக்கும்.
மசாஜ்
மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 - 10  நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
மஞ்சள்
இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப்பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படுத்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.
கற்றாழை ஜெல்
இது சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை
பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.
கடலைமாவு - தயிர் கலவை
கடலை மாவு, தயிர் சம அளவு கலந்து, மூட்டுப் பகுதியில் தடவி 5 - 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். கடலை மாவுக்குப் பதில் பாதாம் பருப்பை அரைத்தும் பயன்படுத்தலாம்.
ரோஜா இதழ் - முல்தானி மட்டி
ரோஜா இதழை காயவைத்துப் பொடித்துக்கொள்ளவும். இதனுடன், முல்தானிமட்டிப்பொடி சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டுக் கலக்கி பேஸ்ட் ஆக்கவும். இதைக் கறுப்புத் திட்டுகள் இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், மூட்டுகள் பளபளப்பாகும். 

ஸ்ட்ரெச் மார்க்

பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர். 
வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம். சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது. அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.
ஸ்ட்ரெச் மார்க் மறைய...
கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். மேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.
சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது. குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும்.
ஸ்ட்ரெச் மார்க் தடுப்பது எளிது!
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.
பாட்டி, அம்மாவுக்கு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருந்தால், அதிகக் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.
நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம். 
ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.

ஆரோக்கிய வாழ்வுக்கு அரோமா தெரப்பி

வீட்டில் வாரத்துக்கு இருமுறை சாம்பிராணி காட்டுவது. கற்பூரம் ஏற்றுவது, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவது எல்லாம், வீட்டில் எப்போதும் இனிய நறுமணங்கள் உலவ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த வாசனைகள் மனதுக்கு அமைதி தரும். நோய்களை விரட்டும். சாணம் தெளித்துக் கோலம் போடுவது, ஆண்டுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிப்பது, வீட்டைச் சுற்றி வாசனை நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பது என நம் முன்னோர்கள் செய்துவந்த ஒவ்வொன்றிலும் மறைந்திருக்கிறது அரோமா தெரப்பி என்கிற நறுமண சிகிச்சை.
வேர், இலைகள், மரப்பட்டை, கிளைகள், பூக்கள், விதைகள், மொக்கு போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களை வைத்து செய்யும் சிகிச்சைதான் அரோமா
தெரப்பி. நம் மூக்கினுள் இருக்கும் சிலியா (Cilia) என்கிற முடிபோன்ற அமைப்பு, காற்றில் கலந்திருக்கும் வாசனையை ஈர்த்து, அதுபற்றிய சிக்னலை மூளைக்கு அனுப்பும். இந்த சிக்னல்மூளை செல்களைத் தூண்டி, உடலின் சில உறுப்புக்களின் செயல்திறனைத் தூண்டிவிடும். பொதுவாக, நம் உடலில் ஏற்படும் நோய்கள் 50 சதவிகிதம் மருந்துகள் மூலமாகவும் 50 சதவிகிதம் நமது உளவியலாலும் குணமாகக் கூடியவை. உளவியல்ரீதியாக நோயைக் குணப்படுத்த அரோமா தெரப்பி உதவுகிறது. எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரு நிமிடம் முகர்ந்தாலே போதும்.
நினைவுத்திறனுக்கு...
ரோஸ்மெரி, ஜெர்மன் புளு சமொமைல் (German Blue Chamomile), மல்லி போன்ற பல்வேறு மலர்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். ரோஸ்மெரி எண்ணெய், ஞாபகமறதியைச் சரி செய்யும். சமொமைல், மூளையைச் சுறுசுறுப்பாகச் செயல்படவைக்கும். மல்லிகை, தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கி புத்துணர்வு அளிக்கும். இவை அனைத்தும் மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். இந்த எண்ணெய்கள் ரோல் ஆன் வடிவில் கிடைக்கின்றன. படிக்கும் முன் உள்ளங்கையில் இரண்டு சொட்டு எண்ணெயை விட்டு, முகர்ந்த பிறகு படிக்கலாம். 15 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவந்தால், வித்தியாசத்தை உணர முடியும். அதன் பிறகு, எப்போது தேவைப்படுகிறதோ, அப்போது பயன்படுத்தினால் போதும்.
மன உளைச்சல் நீங்க...
மெல்லிசா (Melissa), மிர் (Myrrh) போன்ற எண்ணெய்களின் வாசம் அறை முழுவதும் பரவி, மனஅமைதி கிடைக்கச் செய்யும். மெல்லிசா எண்ணெய் மன அமைதியை ஏற்படுத்தும். மிர் உடலில் உள்ள ஆல்ஃபா, பீட்டா செல்கள் அதிகமாவதைக் கட்டுப்படுத்தும். இது, சென்ட் பாட்டில் மற்றும் ரோல் ஆன் வடிவங்களில் கிடைக்கிறது. உள்ளங்கையில் சில துளிகள் விடலாம் அல்லது படுக்கும் அறையில் சில துளிகளைத் தெளிக்கலாம். தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். எதிர்மறை எண்ணங்கள் மறையும்.   மன உளைச்சலில் அவதிப்படுபவர்களுக்கு ஆன்டி டிப்ரஷன் டிப்ஃயூசர் நன்மையைச் செய்யும். முதலில், ஒரு மாதம் தொடர்ந்து நுகரலாம். பிறகு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
பாதுகாப்பான இதயத்துக்கு
ஹெலிசைசம் (Helichysum) மற்றும் லாங் லாங் (Ylong Ylong) எண்ணெய்கள் இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. இதயத் துடிப்பை சீர்செய்யும். இதயச் சுவர்களில் ஏற்பட்ட வலியைக் குறைக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். பதற்றத்தை நீக்கும். கெட்ட  கொழுப்புச் சேர்வதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் இதயப் பாதிப்புகளுக்கு சிறந்த முதலுதவி. இதயப் பிரச்னை இருப்பவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள் தினமும் இருமுறை இந்த வாசத்தை முகரலாம். இதை முகர்ந்தால், 15 நொடிகளில் இதயம் இயல்புநிலைக்கு வந்துவிடும். திடீரென்று மாரடைப்பு வலி ஏற்பட்டால், முதலுதவியுடன், இந்த வாசனையையும் முகரச் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லலாம்.
கணையம் ஆரோக்கியம்
நறுமணத்துக்கும் சுவைக்கும் சேர்க்கப்படும் பட்டையில் (Cinnamon) இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை முகரும்போது, சர்க்கரை நோய், கணையத்தில் இன்சுலின் சுரப்பு சீரற்ற நிலை கட்டுக்குள் வரும். பட்டை எண்ணெயுடன் நான்கைந்து காம்பினெஷன் எண்ணெய் வகைகளும் சேர்த்து சுவாசிக்கலாம். இந்தக் கலவையை அரோமா தெரப்பிஸ்ட், அந்தந்த நோயாளிக்கு ஏற்ப பரிந்துரைப்பார். தினமும் ஐந்து வெண்டைக்காய்களைப் பச்சையாக சாப்பிட, இன்சுலின் சுரப்பு சீராகும்.
சரும சுருக்கத்துக்கு...
மரத்திலிருந்து வரும் பிசின் மூலம் எடுக்கப்படும் ஃப்ரான்கின்சென்ஸ் (Frankincense) எண்ணெயுடன் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூசலாம். சரும சுருக்கங்கள் நீங்கி, புத்துணர்வு நிறைந்த இளமையான சருமத்தைப் பெறலாம். மூப்படைதலைத் தாமதப்படுத்தலாம். முகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஆவி பிடித்து, முகத்தில் எண்ணெய்களை பூசி, மசாஜ் செய்து, 40 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகும். தசைகளின் இறுக்கம் குறையும். ரிலாக்ஸான உணர்வு கிடைக்கும். முகம் பளிச்செனப் பிரகாசிக்கும். முதலில் மூன்று நாட்கள் இதைச் செய்ய வேண்டும். பிறகு, வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒருமுறை என சருமத்தின் தன்மையைப் பொருத்துச் செய்யலாம்.
எதிர்மறை எண்ணங்கள் நீங்க...
ஜெர்மன் ப்ளு சமொமைல், ரோஸ் ஒட்டோ  (Rose otto), ஏஜ்ஜெலிக்கா (Angelica) போன்ற எண்ணெய்கள் மனப் பதற்றத்தைக் குறைத்து, அமைதியடையச் செய்யும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மூளை சரியாகச் செயல்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தன்னம்பிக்கை துளிர்விடும். எதற்கெடுத்தாலும் பயம், பதற்றம் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ அல்லது மற்றவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ எனத் தேவையற்ற கற்பனைகளால் குழம்புபவர்கள், ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம். நல்ல மாற்றம் தெரியும். பிறகு, மாதம் இருமுறை முகரலாம்.